Breaking News

Saturday, 24 July 2021

துதிப்போர்க்கு வல்வினைபோம்

 அனைவருக்கும் வணக்கம்.ஜாதகத்தில ராகு,கேது,சனி ஆகிய கிரகங்கள் எதிர்மறையான கிரகங்கள் என்று சொல்கிறார்கள். உண்மையில் இவை இருளின் உருவகங்கள்.  இருள் என்பது நமது மனதில் உள்ள தீய எண்ணங்களைக் குறிக்கும். தீய எண்ணங்களோடு நாம் இருக்கும் பொழுது  வாழ்க்கையில்  துன்பப்படுவோம். 


சூரியன்,சுக்கிரன், குரு போன்றவை ஒளிக்கு உருவகங்கள்.ஒளி என்பது நம்முடைய மனதில் இருக்கக்கூடிய நல்ல  எண்ணங்களை குறிக்கும்.

 பல ஜென்மங்களில் நாம் செய்த பாவங்களுக்கு நீதியுடன் தண்டனை அளிக்கவே  ராகு, கேது,சனி ஆகியவை அமைந்துள்ளன.


 தீதும் நன்றும் பிறர் தர வாரா 


என்பது கணியன் பூங்குன்றனாரின் வாக்கு. எனவே நன்மையோ தீமையோ நாம் செய்தது தான் திரும்ப வரும்.எனவே நமது மனதில் இருக்கக்கூடிய தீய எண்ணங்களை விலக்கினால் நமது வாழ்க்கை  பிரகாசிக்கும். 

ராகு திசை, கேது திசை ,சனி திசை என்று நாம் மனதைப் போட்டு குழப்பிக் கொள்ளத் தேவையில்லை.காமம், கோபம், லோபம் ,மோகம், மதம்,மாச்சரியம், கொலை ஆகியவற்றை விலக்கினால் போதுமானது. 


துன்பத்திற்கு காரணம் ஆசை என்று புத்தர் பகவான் அன்றே சொன்னார்.நாம் துன்பப்படுகிறோம் என்றால் அதற்கு நிச்சயமாக நமது மனதில் உள்ள உலகியல் ஆசைகளே காரணமாக இருக்கும். ஆசை குறையும் அளவு துன்பம் குறையும்.ஆசை மிகும் அளவிற்கு துன்பமும் மிகும் .


எனவே தீய குணங்களை விலக்கி நல்ல குணங்களைப் பெருக்கிக்கொண்டால்  வாழ்க்கையில் துன்பம் நம்மை அணுகாது. இன்பம் என்றும் விலகாது. 

சரி,நாம் பல ஜென்மங்களில் செய்த பாவங்களை அனுபவித்தே தீரவேண்டுமா என்று கேட்டால்....


 கோயில்களை எதற்கு நம்முடைய முன்னோர்கள் கட்டமைத்து உள்ளனர்?

வழிபாட்டை ஏன் வலியுறுத்துகிறார்கள்?


சிவசிவ என்கிலர் தீவினையாளர் 

சிவசிவ என்றிடத் தீவினை மாளும்

 சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவர் 

சிவசிவ என்னச் சிவகதி தானே.


 என்கிறார் திருமூலர்.


சிவசிவ என்றிடத் தீவினை மாளவே செய்யும். சிவ என்ற சொல்லுக்குப் பொருளே மலமற்றது; தூய்மையானது என்பதே. நமது மனம் எந்த அளவிற்கு தூயதாக உள்ளதோ அந்த அளவிற்கு துன்பம் நம்மை அணுகாது.

 

கந்தசஷ்டிகவசம் ஆனது,


 துதிப்போர்க்கு வல்வினைபோம்


 என்றே துவங்குகிறது. பல வருடங்களாக நானும் துதிக்கிறேன்; வல்வினை போகவில்லையே என்று சொன்னால் பிரச்சினை எங்கு உள்ளது என்று நாம் சிந்திக்க வேண்டும்.வல்வினை விலக வில்லை என்றால் பிரச்சனை துதிப்பதில் உள்ளது.

நாம் முழுமனதோடு... சரணாகதியோடு... நம்முடைய உலகாயத ஆசைகளை விலக்கி இறைவா நீ என்ன எனக்கு கொடுக்கிறாயோ அதை நான் ஏற்றுக் கொள்கிறேன் என்று அமைதியோடு  பிரார்த்தனை செய்தாலே போதுமானது. 


தனக்கென வாழாது பிறர்க்கென முயலுநர் உண்மை யானே என்று கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி பாடுகின்றார்.அவர்களால்தான் இந்த உலகம் நிலைபெற்றுள்ளது. தன்னலம் நீக்கி பிறர் நலத்திற்காக நாம் உழைக்கும் பொழுது பாவ கிரகங்களின் வீச்சு மிக மிக குறைவாகவே அமையும். சிவ சிவ என்றிட நிச்சயமாக தீவினை மாளவே செய்யும். 


பல ஜென்மத்து இருளை ஒரு மெழுகுவர்த்தியின் ஒளி விலக்கிவிடும் எனவே இருளை ஒளியால் விரட்டுவோம். நற்சிந்தனைகள்,நல்ல எண்ணங்களால் நம்முடைய வாழ்வை மேம்படுத்துவோம். கவலைகளை விளக்குவோம். 


நமக்கு உரியது யார் தடுத்தாலும் நம்மிடம் வந்தே தீரும். நமக்கு ப்ராப்தம் இல்லாதது எத்தனை பேர் முயன்றாலும் நம்மிடம் வராது. இந்த உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். 


இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க 


என்ற மாணிக்கவாசகரின் வாக்கிற்கு இணங்க...எப்போதும் இறை சிந்தனையோடு இருப்போம்.நற்சிந்தனையோடு இருப்போம். உலக மக்களின் நன்மைக்காக நாம் இறைவனிடம் தொடர்ந்து பிரார்த்தனை செய்து கொண்டே இருப்போம். மனம்,மொழி, மெய்களால் அனைவருடைய நன்மைக்காக  உழைப்போம்.  மக்கள் அனைவருடைய வாழ்வும் உயரும்; அவர்களில் ஒருவரான நம்முடைய வாழ்வும் உயரும்.

வாழ்க வளமுடன்...

No comments:

Post a Comment